திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ஈசானிய லிங்கம் அருகே நகராட்சிக்கு சொந்தமான 20 சென்ட் இடத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் சூளை மற்றும் வீடுகள் கட்டி வசித்து வரும் ஐந்து குடும்பங்களை, ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி அந்த இடத்தில் உள்ள வீடுகளை நகராட்சி அதிகாரிகள் காவல் துறையின் உதவியோடு திடீரென அப்புறப்படுத்தினர்.
அப்போது, ஐந்து குடும்பங்களின் வீடுகளை அப்புறப்படுத்திய அதே இடத்தில் 60 அடி நீளம் கொண்ட இடத்தில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவரின் அலுவலகம் இருப்பதாக கூறி தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஒருவர் ஈடுபட்டார். இது மாவட்ட ஆட்சித்தலைவரின் உறுதியான ஆணையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாங்கள் வேறு இடத்திற்கு செல்லும்வரை எங்களுக்கு 10 நாட்கள் அவகாசம் அளியுங்கள், நாங்கள் எங்களுடைய பொருட்களை வேறு இடங்களுக்கு மாற்றிக்கொள்கிறோம். பின்னர் நீங்கள் வந்து இந்த இடத்தில் உள்ள வீடுகளை இடித்துக்கொள்ளுங்கள் என்று அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், நகராட்சி அதிகாரிகள் அதை கவனத்தில் கொள்ளாமல் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கினர்.
இது குறித்து வீட்டின் உரிமையாளர் பேசும்போது,
40 ஆண்டுகாலமாக இந்த இடத்திற்கு வரி செலுத்திவருகிறேன். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு அனைத்தும் இந்த விலாசத்தில்தான் உள்ளது. எங்களுக்கு மாற்று இடம் கொடுத்துவிட்டு இந்த இடத்தில் உள்ள வீடுகளை அப்புறப்படுத்தினால் எங்களுக்கு ஏதுவாக இருக்கும் என்றார்.