திருவண்ணாமலை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழ்பெண்ணாத்தூர், செங்கம், போளூர், கலசபாக்கம், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, வேங்கிக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மிதமான மழை பெய்தது.
சூரியன் உதயமாகும் வேளையில் மழைச்சாரல் பொதுமக்களை குளிர்ந்த காற்றுடன் எழுப்பியதால், அனைவருக்கும் காலையிலேயே புத்துணர்ச்சியை உண்டாக்கியது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
ஆடி மாதம் பட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் குளம், குட்டை, கிணறு போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.