திருவண்ணாமலையில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக்கு அக்குழுவின் உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமான வேல்முருகன் வருகை தந்தார். குழுவின் ஆய்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு சுங்கச்சாவடிகள் அமைத்து இரவு பகலாக கொள்ளை அடித்து வருவதாகவும், இதை எதிர்த்து தாம் தொடர்ந்து போராடி வருவதாகவும், தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலையை அடுத்து தற்போது மாவட்டங்களுக்கு உள்ளே பிற மாவட்டங்களை இணைக்கும் சாலைகளில் ஒன்றிய அரசு வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது.
திருவண்ணாமலை-வேலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கடலூர்-விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் தற்போது சுங்கச்சாவடியை அமைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கின்றோம். சென்னை மாநகராட்சியில் இருந்த 3 சுங்கச்சாவடிகளை முதலமைச்சர் ஸ்டாலினின் அழுத்தத்தால் எடுக்கப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டிலுள்ள பாதிக்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் 10 முதல் 30 விழுக்காடு கட்டணம் ஏற்ற இருப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. சுங்கச்சாவடிகளால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து விடுபட சுங்கச்சாவடிகளை முழுமையாக அகற்றிவிட்டு வேறுவிதமாக வசூலிக்க மத்திய தரை வழிப்போக்குவரத்து அமைச்சகம் முயல்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், ’’இது குறித்து வெள்ளை அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். வாகனம் வாங்கும்போதே அனைத்து வரிகளையும் தாங்கள் முழுமையாக செலுத்தி விடுவதாகவும், இருந்த போதிலும் வெள்ளையன் போய் கொள்ளையன் வந்தது போல் சுங்கச்சாவடி மூலமாக வசூலிப்பது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலை ஒன்றிய அரசு செய்து வருவதாகவும்’’ அவர் குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, ஒன்றிய அரசு எதைக்கேட்டாலும் தருவதில்லை எனக்கூறியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஒன்றிய அரசு மாநிலங்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கின்ற அரசாகவும், மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் அடிமை அரசாக நடத்துவதற்கான வேலைகளை தான் பிரதமர் செய்து வருகிறார்.
இது மாநில உரிமைகளைப் பறிக்கின்ற செயல் மட்டுமல்ல. தேசிய இனங்களை அவமதிக்கும் செயலாகவும் நாங்கள் கருதுகிறோம். ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களையும் சமமாக கருதாமல், அனைத்து மாநிலங்களையும் தன்னகத்தே வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. இந்திய மக்களின் ஒற்றுமைக்கும், சமநீதிக்கும், சமூக நீதிக்கும் வேட்டு வைக்கின்ற செயல்.
மேலும், இதனை பாஜக தலைவர் செய்யக்கூடாதென்றும் பாஜக அரசு ஒற்றை மொழி, ஒற்றைப் பண்பாடு, ஒற்றை கலாசாரம், ஒற்றை வாக்காளர் அட்டை, ஒற்றை குடும்ப அட்டை போன்று கொண்டு வருவது என்பது அந்தந்த மாநில மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும் செயல்.
பல்வேறு மாநில அரசுளை பாஜக அரசு காலில் போட்டு மிதித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பல்வேறு குறுக்கு வழியை கையாள்வதாகவும்; இது வரும் காலங்களில் மக்களிடம் பெரும் எழுச்சி அல்லது புரட்சியை ஏற்படுத்தும். ஆகையால், பாஜக இதைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்’’ என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: தாய் பாசத்தால் குடிகார தந்தையை போலீசில் போட்டுக்கொடுத்த சிறுவன்