திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் ஆய்வு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
![சிறுபான்மையினர் கருத்துக் கேட்புக் கூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-02-minority-welfaremeeting-script-7203277_10102019005616_1010f_1570649176_630.jpg)
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜான் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் உறுப்பினர் செயலர் சுரேஷ்குமார் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 17 பயனாளிகளுக்கு 93 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் முதியோர் ஓய்வூதியம், இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன.
![முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-02-minority-welfaremeeting-script-7203277_10102019005616_1010f_1570649176_480.jpg)
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான் மகேந்திரன், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினருக்கு பாதுகாப்புக் கேடயமாகத் திகழ்கிறார். இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும், சிறுபான்மையினர் மகிழ்ச்சியாக வாழும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் மற்றும் புதிய கோரிக்கைகள் குறித்து சிறுபான்மையினர் ஆணையம் மூலமாக உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆய்வு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் சிறுபான்மையினருக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது என்றும் அவர் கூறினார்.