“ஒரு காசு கூட கைப்பற்றவில்லை” - அமைச்சர் எ.வ.வேலு கண்ணீர் மல்க பேட்டி! - todays news
Minister AV Velu: 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையில் ஒரு காசு கூட கைப்பற்றவில்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
Published : Nov 8, 2023, 7:20 AM IST
|Updated : Nov 8, 2023, 8:19 AM IST
திருவண்ணாமலை: தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை என அவருக்குச் சொந்தமான அனைத்து இடத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். எ.வ.வேலுவின் மனைவி மற்றும் அவரது மகன் கம்பன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகார் அடிப்படையிலும் இந்த சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை, நேற்று இரவு 9 மணி அளவில் நிறைவடைந்தது.
இதனை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நடத்திய இடத்தில் இருந்து வெளியேறினர். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “கடந்த ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையின் மூலம் சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக தவறான கருத்துக்களை பரப்பிக் கொண்டுள்ளனர். வருமான வரித்துறை தங்கள் கடமையை செய்ய வந்து உள்ளனர்.
ஆனாலும், எனக்கு நேர்முக உதவியாளராக சென்னையில் இருந்த நபரையும், என்னிடத்தில் ஓட்டுநராக பணிபுரியும் நபரையும் ஐந்து நாட்களாக வருமான வரித்துறையினர் தங்களுடன் கட்டுப்பாட்டு வளையத்தில் வைத்திருந்தது எந்த வகையில் நியாயம்? கடந்த ஐந்து நாட்களாக ஆய்வு என்ற பெயரில் சல்லடை போட்டு சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் என்னுடைய வீட்டில், என்னுடைய மனைவி வீட்டில், என்னுடைய மகன்கள் வீட்டிலோ, மற்றும் கல்லூரி நிறுவனங்களிலோ ஒரு பைசா கூட வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றவில்லை. எனக்கு,. எனது மகன்கள் நடத்தும் கல்லூரி நிறுவனங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை” என்று கண்ணீருடன் பேட்டி அளித்தார்.
மேலும் பேசிய அவர், “ஆய்வு என்ற பெயரில் கடந்த ஐந்து நாட்களாக என்னுடைய கட்சிப் பணிகள் மற்றும் அரசுப் பணிகளை செய்ய விடாமல் வருமான வரித்துறையினர் தடுத்து விட்டனர். கடந்த தேர்தலுக்கு முன்பாக வந்த வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் எதையுமே கைப்பற்றவில்லை, இந்த முறையும் அதுதான் நடந்து உள்ளது.
எனக்கு சொந்தமாக 48.33 சென்ட் நிலம் திருவண்ணாமலையில் உள்ளது. அதை மருத்துவமனை கட்டுவதற்காகதான் 33 வருடங்களுக்கு லீசுக்கு விட்டுள்ளேன். இது தவிர சென்னையில் எனக்கு ஒரு வீடு உள்ளது. இது தவிர எனக்கு எந்த வித ஒரு சொத்தும் இல்லை.
குறிப்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்வதைப்போல் ஐடி மற்றும் ஈடி (அமலாக்கத்துறை) ஆகியவை பாஜகவில் உள்ள அணிதான். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தன்னை முடக்குவதற்காகவே தற்போது நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 11 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலும் மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால், தான் நிரபராதி என்று நிரூபித்துள்ளேன்.
வருமான வரித்துறையினர் சோதனை மற்றும் பிற சோதனைகள் என்ற பெயரில் திமுகவினரை அச்சுறுத்தும் விதமாகவே பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய சோதனைகளின் மூலமாக திமுகவையோ, திமுகவில் உள்ள அமைச்சர்களையோ மற்றும் திமுகவைச் சார்ந்தவர்களையோ மத்திய பாஜக அரசு அசைத்துக் கூட பார்க்க முடியாது.
முந்தைய காலங்களில் வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்திலும் இது போன்ற சோதனைகள் நடைபெறவில்லை. ஆனால், தற்போதைய மோடி தலைமையிலான பாஜக அரசு எதிர்கட்சிகளை அச்சுறுத்திப் பார்க்கிறது” என்றும் எ.வ.வேலு தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியின் மாணவர் குறைதீர்ப்பாளராக ஒய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நியமனம்!