திருவண்ணாமலை: அரசு கலைக் கல்லூரியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டப் பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் ஆகியவற்றை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்படப் பலர் பங்கேற்றனர். பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு, “108 தேங்காய் உடைத்தால் கண்ணுக்குத் தெரியாத கடவுள் வந்து உதவி செய்கிறாரோ இல்லையோ, ஆபத்து என்று 108க்கு போன் செய்தால் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து நிற்கும்.
அந்த 108 வாகன வசதியை உருவாக்கி கொடுத்தவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அந்த வகையில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் 38 மாவட்டங்களிலும் ஆயிரத்து 358 ஆம்புலன்ஸ் வாகனங்களை அளித்து உள்ளார். முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தை முதன்முதலில் செயல்படுத்தியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி'' எனக் கூறினார்.
இதையும் படிங்க: மணிப்பூர் கலவரம் : மத்திய அரசின் தோல்வியே மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் - திருச்சி சிவா!
தொடர்ந்து பேசிய அவர், ''அரசு எப்படி நடைபெறுவது என்பதை விட, மக்களின் உயிர் தான் முக்கியம் என்ற அடிப்படையில் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். மேலும், இந்தக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பல லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றது'' எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ''அந்த வழியில்தான் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் ‘இன்னுயிர் காப்போம்’ என்ற திட்டத்தில் ‘நம்மை காப்போம் 48’ என்ற ஒரு திட்டத்தினை கொண்டு வந்து உள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை விட சிறப்பான மருத்துவ வசதி தரும் வகையில் சென்னையில் சுமார் 230 கோடி ரூபாயில் உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார்” எனவும் உரையாற்றினார்.
முன்னதாக மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற 12 உறுப்பினர்கள் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் அமைந்து உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: பாட்னா கூட்டத்தில் விவாதித்தது என்ன? - சென்னை திரும்பிய முதலமைச்சர் கூறிய தகவல்!