திருவண்ணாமலை மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று தபால் வாக்குகள் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், செங்கம் தொகுதி, சின்ன கோலாபாடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக பால்வளத் துறை அமைச்சர் ராமச்சந்திரனின் அக்கா குப்பம்மாள் என்பவரது மனநிலை குன்றிய மாற்றுத்திறனாளி மகனான கார்த்திக்கிடம் தபால் வாக்கு பெறுவதற்காக அலுவலர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது கார்த்திக் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி செய்கையில் காட்டியதாக சொல்லப்படுகிறது. ஆனால், அலுவலர்களுடன் சென்ற உதவியாளர் சரவணன் என்பவர் கார்த்திக்கிடம் இருந்த தபால் ஓட்டைப் பிடுங்கி உதயசூரியன் சின்னத்திற்கு டிக் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த கார்த்திக்கின் தாய் குப்பம்மாள், உதவியாளர் சரவணனிடம் என் மகன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கச் சொல்லியும் நீங்கள் எப்படி உதயசூரியன் சின்னத்திற்கு டிக் செய்தீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பிய அலுவலர்களை பொதுமக்களும் அதிமுகவினரும் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த தேர்தல் அலுவலர், செங்கம் வட்டாட்சியர், காவல் துறையினர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், கூட்டம் தொடர்ந்து அதிகமாக, அங்கிருந்து சரவணனை வேறு இடத்திற்கு காவல் துறையினர் அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர்.
அப்போது அதிமுகவினரும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். மேலும் காவல் துறை வாகனத்தில் இருந்த சரவணனை தாக்க முயற்சி செய்த பொதுமக்களையும் அதிமுகவினரையும் சமாதானப்படுத்தி அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தேர்தல் அலுவலர்களிடம் செங்கம் தொகுதிக்கு உளபட்ட தபால் வாக்குப்பதிவுகளை மறு வாக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும், தவறு செய்த அலுவலர்களை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.