திருவண்ணாமலை மாவட்டம் திண்டிவனம் சாலை, தென் அரசம்பட்டு கிராமத்தில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மூடப்படாத ஆழ்துளைக் கிணறு ஒன்று மழைநீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றப்பட்டது. அப்போது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்திற்கு மவுன அஞ்சலியும் சுஜித் நினைவாக கல்வெட்டும் திறக்கப்பட்டது. இதனை திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி திறந்துவைத்தார்.

இந்தக் கல்வெட்டில், "நான் சுஜித் பேசுகிறேன், நான் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் பிறந்து இரண்டு வயதில் ஆழ்துளைக் கிணற்றின் கருப்பறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டது. இறப்பு அனைவருக்கும் உண்டு என்றாலும், என்னை போல் 80 மணி நேரம் மரணத்துடன் போராடிய அந்தத் தருணம் மிகக் கொடுமையானது.

நான் இந்த உலகத்தில் வாழ முடியாமல் போனாலும் இனிவரும் காலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை திறந்துவைக்காமல் என்னைப் போல் குழந்தைகளின் உயிரை பாதுகாக்கவும் என் இறப்பு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்" எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சியர் கந்தசாமி மாணவிகளுடன் சேர்ந்து சுஜித் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவண்ணாமலை முழுவதும் நான்கு நாள்களில் ஐந்து ஆயிரத்து 804 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக 18004253678, 04175 233141 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண், எனது கைபேசி 9444137000 என்ற எண்ணிற்கும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்தார்.