திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டு தினமான இன்று (ஜன.1) அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து புத்தாண்டையொட்டி தமிழ்நாடு பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதுமட்டுமின்றி ஐயப்ப பக்தர்கள் மற்றும் மருவத்தூர் பக்தர்களும் அண்ணாமலையார் கோயிலில் குவிந்தனர். அந்த வகையில் இன்று (ஜன.1) ஒருநாள் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இலவச தரிசனம் மற்றும் 50 ரூபாய் கட்டண தரிசனம் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜ கோபுரம் மற்றும் அம்மனி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்தபின் கோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்லுமாறு அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:வைகுண்ட ஏகாதசி: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்