ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவருவது அதிகரித்துள்ளது.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவருவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையிலான காவல் துறையினர் வேட கொல்லைமேடு, நாகநதி ஆத்துப்பாலம், நீப்பார்பட்டு கூட்டு ரோடு ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் காவல் துறையினரைக் கண்டு தப்பியோட முயன்றனர். இதையடுத்து, காவல் துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்தபோது 432 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காகக் கடத்த முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆரணியைச் சேர்ந்த உமாபதி, பாஸ்கரன், மணிகண்டன், சிவா, குப்பன், வாலாஜாவைச் சேர்ந்த விநாயகம், ராணிப்பேட்டையைச் சேர்ந்த திருமலை, கணேஷ், மேகணேஸ்வரன், வேலூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, 16 பேரைக் காவல் துறையினர் கைதுசெய்து 432 லிட்டர் கள்ளச்சாராயம், 12 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க:கள்ளச்சாராயம் காய்ச்சி விற்க முயன்ற கஞ்சா வியாபாரி கைது