திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கம் குறித்த நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, தற்போது குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. மத்திய அரசின் ஆய்வின்படி இந்தியாவில் 527 மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டம் நிலத்தடி நீர் குறைந்து வறட்சி பாதித்த முதல் மாவட்டமாக கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 80 சதவீதம் தண்ணீர் பிரச்னை உள்ளது. அதுமட்டுமல்லாமல் நிலத்தடி, மேற்பரப்பு நீர் மாசுபட்டுள்ளது. தொழில்நுட்பம் மூலம் நீர் உற்பத்தி செய்ய அரசு பல்வேறு முயற்சி செய்து வருகிறது.
மேலும் தண்ணீரை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது 180 நீர்நிலைகளை தன்னார்வலர்கள், இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் சீரமைக்கப்பட்டு வருகிறது.
தண்ணீரை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அதிகவிலை கொடுத்து வாங்கும் நிலை உருவாகும். எனவே இதனை மக்களிடம் எடுத்துச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு ஜல்சக்தி அபியான் இயக்கத்தை மாநில அரசு மூலம் செயல்படுத்தி வருகிறது.
நம்மிடம் தண்ணீர் இல்லை என்றால் பணத்திற்கு மதிப்பு இருக்காது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு 2,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.