திருவண்ணாமலை: போளூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் விஜய நகர பேரரசின் குகைகள், சமணப் படுகைகள் உள்ளிட்ட வரலாற்று நினைவுச் சின்னங்கள், கோவில்கள் உள்ளிட்ட புனிதமான இடங்களால் சூழப்பட்டுள்ள கோபுரமலை வருவாய்த் துறை பதிவேடுகளில் மலை புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கைவினை பொருள்கள் மூலம் வருவாய் ஈட்டும் வகையில் மலையில் சிறிய கற்களை உடைக்க அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதை தவறாக பயன்படுத்தும் சுய உதவி குழுக்கள், கல் உடைக்கும் நிறுவனங்களுக்கு உள் குத்தைகைக்கு கொடுத்துள்ளது.
அந்த ஒப்பந்ததாரர்கள் மலைகளை உடைக்க அதிநவீன இயந்திரங்களையும், வெடி பொருள்களையும் பயன்படுத்துவதால் விவசாய நிலம் மற்றும் சுற்றுப்புற குடியிருப்புகளில் கற்கள் சிதறி தெறிப்பதால், விவசாய நிலம், கால்நடைகள், பறவைகள் கடுமையாக பாதிக்கபடுவதுடன், மேலும் கடுமையான நில அதிர்வை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக சிவக்குமார் என்ற ஒப்பந்ததாரர் அரசாங்கத்திற்கு உரிய உரிமம் செலுத்தாமல் சட்டவிரோதமாக குவாரிகளை நடத்தி இயற்கை வளங்களை திருடுவதால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், குவாரியின் ஏலம் கடந்த மார்ச் மாதமே முடிந்த பிறகும் குவாரியை விட்டு வெளியேறாமல், ஆயிரக்கணக்கான டன் அளவில் கனிமங்களை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
கோபுர மலையை தொல்லியல் துறை ஆய்வு செய்து, சம்பந்தபட்ட துறைகளுக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டுமென திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கே. வீரப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆனந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோபுர மலையில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடைவிதித்ததுடன், வழக்கு குறித்து தமிழ்நாடு அரசும், ஒப்பந்ததாரர் சிவக்குமாரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியவருக்கு முன் ஜாமீன் மறுப்பு!