திருவண்ணாமலை: தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (நவ. 3) காலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, திருவண்னாமலை உள்பட எ.வ. வேலுவுக்கு சொந்தமான 80க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய கட்டுமான நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், காலை 6 மணி முதல் அவருக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் முக்கியமானவர் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு. கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் எ.வ. வேலு உணவுத்துறை அமைச்சராகவும், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும், 2021 ஆம் ஆண்டு மீண்டும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று பதவி வகித்து வருகிறார்.
அமைச்சர் எ.வ. வேலு சென்னை அபிராமிபுரம் சீனிவாசா தெருவில் வசித்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள அவரது வீடு, அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி, அலுவலகம் மற்றும் அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி வெட்டிக்கொலை.. திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!
அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான நிறுவனங்கள், பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர்கள், கட்டிடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெறுகிறது. அதேபோல், கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம், திருவான்மியூர் பகுதியில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனம் மற்றும் அது தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஐ.எஸ்.எப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை மணல் குவாரிகளில் நடத்திய சோதனையில் கிடைக்கப் பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. இன்று கல்லூரி நாள் என்பதால் கல்லூரியில் பணியாற்றும் அலுவலர்கள், மாணவர்களில் ஐடி கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரி சோதனை!