திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தி தேர்வு எழுதுவதற்காக ஹிஜாப் அணிந்து வந்திருந்த மாணவியை தேர்வறையில் இருந்து வெளியே அனுப்பிய நிகழ்வு நடந்தேறி உள்ளது. திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி புதூர் பகுதியில் இயங்கி வரும் அண்ணாமலையார் மேல்நிலை தனியார் பள்ளியில் தட்சன் பாரத் இந்தி பிரசார சபா சார்பில் இந்தி தேர்வுகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடந்த வாரம் முதல் நடைபெறுகின்றன.
இதில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுலா வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள், இந்தி தேர்வுகளை எழுதி வருகின்றனர். இதில் மத்தியமா, பிராத்மிக், ராஷ்டர பாஷா தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஷபானா என்ற பெண் ஹிஜாப் உடையை அணிந்து தேர்வு எழுதி உள்ளார்.
அப்போது ஹிஜாப் உடையை அகற்றாமல் தேர்வு எழுதிய ஷபானாவை, ஹிஜாப் உடையை அகற்றிவிட்டு தேர்வு எழுதுமாறு தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஷபானா ஹிஜாப் உடையை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்து, ஹிஜாப் உடையுடன் தான் தேர்வு எழுதுவேன் என கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனை ஏற்காத தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் அவரை தேர்வு எழுத விடாமல் பாதியிலேயே தேர்வறையில் இருந்து வெளியே அனுப்பியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து அங்கு திரண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தேர்வு எழுதிய ஷபானா கூறுகையில், "மத்தியமா இந்தி தேர்வு எழுதுவதற்காக வந்திருந்தேன். நான் ஒரு பள்ளியில் அரபி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். ஹிஜாப் உடையை அகற்றிவிட்டு தேர்வு எழுத கூறினார்கள். நான் ஹிஜாப்பை அகற்ற மாட்டேன் எனக் கூறினேன். அதற்கு அவர்கள் என்னை தேர்வு எழுத விடவில்லை.
எங்கள் மதத்தில் ஹிஜாப்பை கழட்டுவதற்கு அனுமதி இல்லை என நான் அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் ஹிஜாப்பை கழட்டி விட்டு தேர்வு எழுதுவதாக இருந்தால் எழுதுங்கள், இல்லையென்றால் செல்லலாம் என கூறினார்கள். ஹிஜாப் இல்லாமல் தான் தேர்வு எழுத வேண்டும் என்றால் நான் எழுத மாட்டேன். அதனால் தான் நான் வெளியேறினேன்.
தேர்வு துவங்கி ஒரு 20 நிமிடம் தான் தேர்வு எழுதி இருப்பேன். நான் எழுதிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் என்னிடம் இருந்து தேர்வு மட்டியை வாங்கி வெளியே அனுப்பி விட்டனர்" எனத் தெரிவித்தார். இந்த சம்பவத்தையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் தேர்வு நடைபெறும் பள்ளியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்-யை சந்தித்த ஷபானா, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகார் மனு அளித்தார்.
இதையும் படிங்க: "நாடாளுமன்றத்தில் மோடியை பார்த்தால் பொறாமையாக உள்ளது" - டி.ஆர்.பாலு