திருவண்ணாமலை: சேத்பட் அடுத்த தத்தனூர் மதுரா கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி அஞ்சலி தேவி. இவர்களுக்கு மூன்று வயது மகளும் மற்றும் இரண்டு வயது மகன் மற்றும் ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவருக்கு நான்கு ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ள நிலையில் இவரது நிலத்தில் விவசாய பயன்பாட்டிற்காகக் கிணறு வெட்ட முயன்று உள்ளார். அப்போது இவரது நிலத்தில் அருகே உள்ள குருவர், அர்ஜுனன், துரைசாமி, செல்வம், சீனிவாசன், தவமணி உள்ளிட்ட உறவினர்கள் பார்த்திபனைக் கிணறு வெட்டக்கூடாது எனத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இவர் கிணறு வெட்டுவதால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி சேட்பட் காவல் நிலையத்தில் பார்த்திபன் மீது புகார் மனு அளித்துள்ளனர். இதனை அடுத்துப் பல முறை காவல் நிலையத்தில் தனது தரப்பு நியாயத்தைக் கூறியும் காவல் துறையினரிடம் பார்த்திபனுக்கு உரிய நிவாரணம் கிடைக்காத நிலையில் மன உளைச்சல் அடைந்த பார்த்திபன் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது ஆறு மாத கைக்குழந்தை உட்பட 3 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் தீ குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைக் கண்ட பணியிலிருந்த காவல் துறையினர் தீக்குளிக்க முயன்ற பார்த்திபனிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலைப் பறித்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினார். மேலும் தீக்குளிக்க முயன்ற பார்த்திபன் மற்றும் அவரது மனைவியை விசாரணைக்காகக் காவல் துறையினர் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கைக்குழந்தை உட்பட மூன்று குழந்தைகளுடன் குடும்பமே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முற்பட்ட செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கொலை செய்து குட்டையில் வீசப்பட்ட விமான நிலைய ஊழியரின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு