கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் டாஸ்மாக் கடைகளுக்குள் புகுந்து மதுபானங்களை கொள்ளையடிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியின் உத்தரவின்படி, செங்கம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சின்ராஜ் தலைமையிலான காவல் துறையினர் நடு ஆனைமங்கலம், பரமனந்தல், பகுதியில் மது விலக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, 55 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த சேட்டு, செந்தில் குமார், உத்திரம் ஆகியோரைக் கைது செய்து, காவல் துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு பேரல்களில் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறலைக் கண்டுபிடித்து அழித்தனர்.
![மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட கள்ளச்சாரயம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-04-arrack-destroyed-vis-7203277_02052020185805_0205f_1588426085_629.jpg)
இதனிடையே திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, அவர்களின் தலைமையிலான காவல் துறையினர் கெங்கநந்தல் கிராமத்தில் மது விலக்கு சோதனை நடத்தினர்.
சோதனையில், 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஐந்து பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1250 லிட்டர் கள்ளச்சாராய ஊறலைக் கண்டுபிடித்து அழித்தனர்.
மேலும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பழனி தலைமையிலான காவல் துறையினர் இறையூர் கிராமத்தில் மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், ஐந்து லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த பிரபு என்பவரைக் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க : ஆன்லைன் வர்த்தகத்திற்கு மத்திய அரசு அனுமதி