திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சஞ்சீவி ராமனுக்கு சொந்தமாக நிலத்தை, அம்மாவட்டத்தின் முன்னாள் அதிமுக செயலாளர் அபகரித்துள்ளதாக சென்னை காவல் தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இன்று புகாரளிக்கப்பட்டது.
நில ஆக்கிரமிப்பு
திருவண்ணாமலை போளூர் சாலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 188 சதுர அடி அளவிலான காலி நிலம் உள்ளது. இதை, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளரான பெருமாள் நகர் ராஜன், கட்சி அலுவலகத்திற்காக வாடகைக்கு எடுத்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த நிலத்திற்கு வாடகை கூட கொடுக்காமல் இருந்து உள்ளார்.
இதுதொடர்பாக சஞ்சீவிராமன் திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
புகார் மனு
ஆக்கிரமித்துள்ள தனது நிலத்தை திருப்பிக்கேட்டால் சமூகவிரோதிகள் மூலமாக கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறும் சஞ்சீவிராமன், இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் தனது நிலத்தை முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளரிடமிருந்து விரைந்து மீட்டு தர நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
இந்த புகார் மனு தொடர்பாக பெருமாள் நகர் ராஜனை தொடர்புகொண்டு கேட்டபோது, அதிமுக கட்சி அலுவலகம் கடந்த நான்கு ஆண்டுகளாக அங்கு செயல்பட்டுவருகிறது. முறையாக வாடகையும் கொடுத்துவிடுகிறோம். அந்த நிலத்தை வாங்க திட்டமிட்டிருந்த நிலையில், வேறு ஒருவர் வாங்கிவிட்டார். அந்த நிலம் தொடர்பான பிரச்னையை நீதிமன்றத்தை நாடி தீர்த்துக் கொள்வதாக திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து விட்டுதான் வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த திமுக முயற்சி' - முதலமைச்சர் குற்றச்சாட்டு