திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அடுத்த நார்த்தாம்பூண்டி கிராமத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் இருளர் இன மக்கள், இஸ்லாமியர்கள், அகமுடையார்கள் என 41 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 50 வருடங்களாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனிநபர் சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதாக வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி முன்னிலையில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் குமார் மற்றும் குணசேகரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு 5 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டதால் வீடுகளில் வசித்து வருபவர்கள் அவரவர் வீட்டுக்குள் கதவை சாத்திக்கொண்டு வெளியே வராமல் இருப்பதால் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.
அதோடு மட்டுமில்லாமல் மின்சாரத்துறை ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்த பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கலசப்பாக்கம் அடுத்த நார்த்தாம்பூண்டி கிராமத்தில் வசித்து வரும் சரவணன் என்பவர் அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் 41 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏரியையும், குளங்களையும் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வருபவர்களை அகற்றி நீர் நிலைகளை காப்பாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவுபடி ஆக்கிரமிப்புகள் அகற்றி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினிக்கு உத்தரவிட்டதையடுத்து 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர், தற்போது அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் இருளர் இன மக்கள், இஸ்லாமியர்கள், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், ஒட்டர்கள், அகமுடையார்கள் என 41 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 50 வருடங்களாக வீடுகள் கட்டி வசித்து வந்த வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கும் பணியில் ஐந்து ஜேசிபி இயந்திரம் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வீடுகள் இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய்த்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்கள் அவரவர் வீட்டுக்குள் கதவை சாத்திக் கொண்டு வீடுகளை இடிக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு புறம் மின்சாரத்துறை ஊழியர்கள் மின் இணைப்புகளை துண்டித்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வருவாய் துறையினர் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: பேக் குடோனில் பணியாற்றிய 11 வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!