திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஆவூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி பார்த்திபன். இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த ஏழை கூலி தொழிலாளியின் 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது.
கரோனா தொற்றால் பள்ளி திறக்காமல் இருப்பதால் மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனைப் பயன்படுத்திய பார்த்திபன், மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த மாணவி இரண்டுமாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே, பார்த்திபனின் வீட்டிற்குச் சென்று திருமணம் செய்து கொள்ளும்படி மாணவியின் பெற்றோர் கேட்டுள்ளனர். ஆனால் பார்த்திபனின் பெற்றோர், சிறுமியின் கருவை கலைத்தால் மட்டுமே திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பார்த்திபனை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க:தக்கலை அருகே சிறுமி மாயம் - காவல் துறையினர் விசாரணை