திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அந்தனூர் ஊராட்சி பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சித் தேர்தலில், பொது தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், மேல்செங்கம் துரிஞ்சாபுரம் பட்டியலினத்தைச் சேர்ந்த கலைச்செல்வி வெங்கடேசன் மற்றும் அந்தனூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி மனோகரன் இருவரும் போட்டியிட்டுள்ளனர். அதில், பட்டியலின பெண் கலைச்செல்வி வெங்கடேசன் ஊராட்சி மன்றத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதனால், கடந்த 4 ஆண்டுகளாக ஊராட்சிக்குத் தேவையான எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்ய முடியாமல் தவித்து வருவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். மேலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நபர் பட்டியலின பெண் தலைவி என்பதாலும், தனக்கு வாக்களிக்க மறுத்த அந்தனூர் ஊராட்சி மக்களை பழிவாங்கும் நோக்கிலும், செங்கம் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளரான மனோகரன் என்பவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அந்தனூர் ஊராட்சிக்கு எவ்வித பணிகளையும் வழங்கக்கூடாது என மிரட்டி வருவதாகவும் கலைச்செல்வி கூறியுள்ளார்.
மேலும், பணி வழங்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்யும் வேலைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தற்போது அந்தனூர் ஊராட்சிக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட பல வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் முறையிட்டும், எவ்வித பலனும் அளிக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகையால், புறக்கணிக்கப்பட்ட ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், ஊராட்சி ஒன்றியத்தின் அலுவலக நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஊராட்சி மன்றத் தலைவி, “தான் ஒரு பட்டியிலின பெண் தலைவி என்பதாலும், தன்னிடம் தேர்தலில் தோற்ற காரணத்தாலும் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் மனோகரன் தொடர்ந்து தன்னை மனஉளச்சலுக்கு ஆளாக்குவதாகவும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நல்லது நடக்க என் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியையும் தான் ராஜினாமா செய்ய தயாராக உள்ளோன்" எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதே போன்று, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி பகுதியில் பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இதையும் படிங்க: நாயை கொலை செய்து தூக்கிச் செல்லும் இளைஞர்கள்.. விழுப்புரத்தில் நடப்பது என்ன?