திருவண்ணாமலை அடுத்த தேனி மலையிலுள்ள மலை மற்றும் இயற்கை வளங்களை குடைந்து, சுமார் 50 சென்ட் நிலத்தை போக்குவரத்து துறையில் நடத்துனராக பணியாற்றி வரும் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் ஆக்கிரமித்து விற்பனை செய்துவருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த இடத்தில் பரமேஸ்வரன் கட்டடம் ஒன்றையும் கட்டியுள்ளார், அந்தக் கட்டடத்தை வருவாய் கோட்டாட்சியர் பார்வையிட்டு அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கினர்.
தற்போது மறுபடியும் பரமேஸ்வரன் அந்த இடத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீர்த்துளி இயக்கம் சார்பாக இளைஞர்கள் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட சென்றபோது அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள பரமேஸ்வரன் என்பவர் மரக்கன்றுகள் நட விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
கிராம உதவியாளர் நாராயணன் முன்னிலையில் இந்த இடத்தை நாங்கள் விலைக்கு வாங்கி விட்டோம் மீறி மரக்கன்றுகளை நட்டால் உயிரோடு உங்களை விட மாட்டோம்.
மேலும் பெண்களை மானபங்கம் செய்து விட்டதாக பொய் புகார் கொடுப்போம் என்று மிரட்டல் விடுப்பதாக இளைஞர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இயற்கை வளங்கள் மற்றும் மலைகளை சுரண்டி விற்பனை செய்து வரும் பரமேஸ்வரன் போன்ற ஆள்களிடம் இருந்து அரசு இடத்தை மீட்டுத் தரும்படி நீர்த்துளி இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் கே எஸ் கந்தசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நாளை (ஆக.24) ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.