திருவண்ணாமலை அடுத்த பெரிய கள்ளப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா அருந்ததியினர் காலனி பகுதியில் உள்ள சிறுவர்கள், மொபைல் போனில் ஃப்ரீ பயர் விளையாட்டை சாலையோரம் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிறுவர்களுக்கு இடையே ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்று சத்தமாக சொல்லி விளையாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை அந்த வழியாக சென்ற கருவேட்டாம் பாறை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களை கிண்டல் செய்கிறார்கள் என்று எண்ணி அந்த சிறுவர்களை தாக்கியுள்ளார்கள்.
பின்னர் இது இரு பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு இடையே பிரச்னையாக மாறியுள்ளது. இந்நிலையில் ஒரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பெரிய கள்ளப்பாடி மதுரா அருந்ததியினர் காலனி பகுதியில் உள்ள மாதா கோயிலை கற்களால் அடித்து உடைத்தும், அந்தப் பகுதியில் உள்ள சிறு மளிகை கடையை தாக்கியும், இரு வீடுகள் மற்றும் மூன்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களையும் தாக்கியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து இந்தச் சம்பவத்தை கண்டித்து அருந்ததியினர் காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், திருவண்ணாமலை - கடலூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சொத்துத்தகராறில் சகோதரரின் மனைவியை ஓட ஓட வெட்டிய சம்பவம்; சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ