திருவண்ணாமலை: பிப்.12ஆம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் மர்ம நபர்கள் சுமார் ரூ.75 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி தலைமையில் 9 தனிப் படைகள் அமைக்கப்பட்டு ஹரியானா, தெலங்கானா, ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஹரியானாவில் ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய முகமதுஆரிஃப் மற்றும் ஆசாத் இருவரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து ஏடிஎம் கொள்ளை குறித்து விசாரணை செய்ய வேண்டும் என முகமுதுஆரிஃப் மற்றும் ஆசாத் இருவரையும் திருவண்ணாமலை நகர காவல் துறையினர் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் ஏழு நாட்கள் விசாரணை கெடு முடிந்த நிலையில், நேற்று மீண்டும் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண் 1 இருவரையும் காவல்துறையினர் ஆஜர் படுத்தினர். தற்போது ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: முதுகில் டேப் மூலம் ஒட்டி கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்