சிவப்பு மண்டலமாக உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில், இதுவரை 82 பேர் கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட ஆயிரத்து 60 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று, சென்னை கோயம்பேட்டில் பணிபுரிந்த இரண்டு பேர், சென்னை எம்ஜிஆர் நகரில் பணிபுரிந்த பெண் உள்ளிட்ட இருவர் என மொத்தம் நான்கு பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, சுகாதாரத் துறையினர், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் கிராமங்களில் முகாமிட்டு, கிராமத்திலுள்ளவர்கள் அனைவரையும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமம் முழுவதும் சுகாதாரத் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி தீவிரம்!