திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே இருசக்கர வாகனத்தில் சிறுமியை கடத்திச் சென்று மதுபானத்தை ஊற்றி பாலியல் வன்புணர்வு செய்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இலியாஸ் (20), சூர்யா (22), பர்கத் (24), உள்ளிக்ட்ட மூன்று பேரை வந்தவாசி காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
மேலும் திருவண்ணாமலை தாலுகா, சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (38) என்பவர் பலமுறை வழக்குப்பதிவு செய்தும் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதால் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினர் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
குற்றவாளிகள் நால்வரின் சட்டவிரோத செயலைக் கட்டுப்படுத்த வேண்டி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி குற்றவாளிகள் நால்வரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 91 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.