திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை மலை அருகேயுள்ள மேல்பட்டு பகுதி வன காவலர்கள் ராஜமாணிக்கம், சந்திரன். இவர்கள் நேற்று (ஆக.26) இரவு இருசக்கர வாகனத்தில் கோரையாறு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் மண் சரிவில் திடீரென இவருவம் சிக்கி விபத்துக்குள்ளாகினர். இந்த விபத்தில் ராஜமாணிக்கம், சந்திரன் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைக் கண்ட அவ்வழியாக வந்த சிலர், இருவரையும் மீட்டு முதலில் மேல்பட்டு வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து வன அலுவலர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வனக்காவலர்கள் சென்ற இருசக்கர வாகனம் மண்சரிவில் சிக்கி சரிந்து விழும்போது அதிர்ஷ்டவசமாக மலைப் பள்ளத்தாக்கில் விழாமல், சாலை ஓரமாகவே விழுந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இரவு நேரத்தில் செங்கம் பரமனந்தல் பகுதியிலிருந்து ஜவ்வாது மலைக்கு செல்லும் வழி முழுவதும் முறையான தடுப்பு சுவர்கள் அமைக்காததால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. வரும் காலங்களில் பெரும் உயிர் சேதம் ஏற்படும் முன்பே மலை பாதையோரம் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டும் என செங்கம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: லாரி மோதி விவசாயி பலி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!