திருவண்ணாமலை: மத்திய பேருந்து நிலையத்தில் ராதா என்பவருக்கு சொந்தமான டீ கடை இயங்கி வருகிறது. நேற்று (ஜன.7) கடையின் உள்ளே கேஸ் அடுப்பில் விற்பனைக்கு தேவையான தின்பண்டங்களை பிற்பகல் 12.30 மணி அளவில் தயாரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்துள்ளது. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், கடையில் பணியில் இருந்த ஊழியர்கள் கடையை விட்டு வெளியேறி உடனே காவல்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கேஸ் சிலிண்டர் தீப்பிடித்து கடையில் உள்ள மற்ற பொருள்களுக்கும் தீ பரவியது. கடையின் உள்ளே மளமளவென தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளே சிலிண்டர் இருப்பதால் அக்கம்பக்கத்தில் இருக்கும் கடைக்காரர்கள் மற்றும் கடை ஊழியர்கள் யாருமே உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்றிருந்தனர். அரை மணி நேரம் தாமதமாக பேருந்து நிலையத்திற்கு வந்த தீயணைப்பு வாகனம், தண்ணீரை பீச்சி அடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது.
பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் சிலிண்டர் வெடித்து விடுமோ? என்ற பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர். திடீரென ஏற்பட்ட இந்த தீவிபத்து பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மைனர் பெண்ணின் கருவை கலைக்க அனுமதி வழங்கி உத்தரவு!