திருவண்ணாமலை: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியும், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் பேசுகையில், “உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு காவிரியிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டுமென மகத்தான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.
அவ்வாறு தீர்ப்பு வழங்கியும் கூட கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாததை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். குறிப்பாக 1996ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நானும் குழுவில் பங்கேற்றேன். உச்ச நீதிமன்ற உத்தரவிட்டால் அன்றைய தினம் உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவது சாதாரணமான விஷயமாக இருக்கும்.
ஆனால் இன்றைய தினம் கர்நாடகாவில் இருக்கக்கூடிய காங்கிரஸ் அரசு தான்தோன்றித்தனமாக செயல்படுவது தமிழ்நாடு விவசாயத்தையும், தமிழ்நாட்டின் விவசாயிகளையும் வஞ்சிப்பது போல இருக்கின்றது. உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கூட, 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட மறுக்கக்கூடிய கர்நாடகா அரசின் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் என்று சொன்னால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் போராட்டம் நடத்தப் போகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: அரசு பேருந்து மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் பலி.. கோயில் திருவிழா சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்!