திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு என்.எம்.ஆர். உழவர் பேரவை மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மணிலா இழப்புக்கு கணக்கெடுத்து இன்சூரன்ஸ் வழங்கக் கோரி வலியுறுத்தினர். அப்போது இயற்கை சீற்றம் மற்றும் பருவ மழை தவறி பெய்ததால் மணிலா செடிகளில் 1 அல்லது 2 மணிலா காய்கள் மட்டுமே விளைந்துள்ளன. இந்த நிலையில் எலிகளின் இனப்பெருக்கம் அதிகரித்து விளைவிக்கப்பட்ட ஒன்று அல்லது இரண்டு மணிலா காய்களும் சேதமாவது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், ஏக்கருக்கு 30 கிலோ காய்ந்த மணிலா மட்டுமே உற்பத்தியாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு வேளாண் துறை மணிலா பயிர் அறுவடையை சோதனை செய்து மகசூல் கணக்கிட்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் காட்டு பன்றி மூலம் சேதம் ஏற்படுவதால் சோலார் வேலி அமைக்க மானியம் மற்றும் எலிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதற்கு விவசாயிகளுக்கு உதவிட வேண்டுமென்று விவசாயிகள் தங்கள் கைகளில் எலி மற்றும் ஆணுறை ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.