திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் , தண்டராம்பட்டு அடுத்த சதாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி ( 75 ). இவர் அதே கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் எள் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் , நேற்று (மே 21) அதிகாலை குப்புசாமி தண்ணீர் பாய்ச்சுவதற்காக தனது நிலத்திற்கு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த அவரது மனைவி கருப்பி ( 65 ) தனது உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்தார்.
இதையடுத்து உறவினர்கள் குப்புசாமியின் நிலத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அவரைக் காணவில்லை. தொடர்ந்து அவரை அக்கம் பக்கம் தேடிய போது , அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் குப்புசாமி சடலமாக கிடந்தது தெரியவந்தது .
இதனால் அதிர்ச்சி அடைந்த குப்புசாமியின் உறவினர்கள் வாணாபுரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் குப்புசாமியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
குப்புசாமியின் மரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், " குப்புசாமியின் பக்கத்து நிலத்துக்காரர் ராமசாமி ( 38 ) வன விலங்குகளிடமிருந்து நெற்பயிர்களை காப்பாற்ற மின் வேலியை அமைத்துள்ளார். இந்த மின் வேலியில் சிக்கி குப்புசாமி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ராமிசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தானும் தனது நண்பர் சிவகுமார் (40) என்பவரும் நேற்று காலை நிலத்திற்கு வந்த போது மின் வேலியில் சிக்கி குப்புசாமி உயிரிழந்து கிடந்தார் என்றும், தங்கள் மீது பலி வரமால் இருக்க குப்புசாமியின் சடலத்தை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் வீசியதாகவும் தெரிவித்தார். அதன்பின் காவல்துறையினர் சிவகுமாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.