திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கன்னி பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (32). ஒன்பது மாத கர்ப்பிணியான இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். இவர் கடந்த 11ஆம் தேதி மருத்துவ பரிசோதனை செய்ய செங்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கரோனா அறிகுறி உள்ளது போல் தெரிகிறது என்று கூறி, திருவண்ணாமலை உள்ள கரோனா பரிசோதனை நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மூன்று நாள்கள் கழித்து இன்று அவருக்கு முடிவு வந்ததில் கரோனா தொற்று இல்லை என்று அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் திருவண்ணாமலை மருத்துவமனையில் இருந்து தனது வீட்டிற்கு செல்ல செங்கம் பேருந்து நிலையத்தில் இறங்கி, அரசங்கன்னி செல்லும் பேருந்துக்காக காத்திருந்தபோது செங்கம் மருத்துவ குழு அவரை தடுத்து நிறுத்தி உங்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்து தப்பித்து வந்ததாக கூறியுள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அமுதா, தான் தற்போது திருவண்ணாமலை கரோனா பரிசோதனை நிலையத்தில் இருந்துதான் வருகிறேன் என்றும் தனக்கு கரோனா தொற்று இல்லை என்று கூறி சுமார் இரண்டு மணி நேரம் வாக்குவாதம் செய்துள்ளார்.
பிறகு தன் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் தன்னால் வரக்கூடாது என்று கூறி மருத்துவர்கள் உடன் சென்றார். மருத்துவர்களின் இந்த அலட்சியப்போக்கு செங்கம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.