திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட அறிவியல் பூங்காவைக் கடந்த பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்துவைத்தார்.
அதன்பின்னர், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பூங்கா திறக்கப்படாமலும், நிலுவையிலுள்ள ஒரு சில பணிகளை முடிக்காமலும் இருந்துவந்தது. எனவே, நிலுவையிலுள்ள கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கு ஆலோசனை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவியல் பூங்காவிற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின் ஆலோசனைகள் வழங்கி, விரைவாகப் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.
கட்டப்பட்டுள்ள அறிவியல் பூங்காவின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் தரமாக உள்ளதா என்பது குறித்தும் ஆட்சியர், திட்ட இயக்குநர் ஜெயசுதா ஆகியோர் அறிவியல் பூங்காவிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பிரம்மாண்டமான அறிவியல் பூங்காவில் மாணவர்கள் அறிவியல் பூர்வமாக விளையாடும் விளையாட்டுக்கள், அறிவியல் பரிசோதனை செய்வதற்கான விளையாட்டு அம்சங்கள், உடற்பயிற்சிக் கருவிகள், நூலகம், குடிநீர் வசதி, முதலுதவி, கழிவறை, உணவகம், நடைபாதை, இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இப்பூங்காவில் ஏற்படுத்தப்படவுள்ளன.