திருவண்ணாமலை: அருணாசலேசுரர் திருக்கோயில் ஆவணி மாதம் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேசுரர் திருக்கோயில் 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதை உள்ளது.
கிரிவலம் செல்ல தடை
இதில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாள்களில் கிரிவலம் வருவதற்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் வருகை புரிந்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, கடந்த 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது.
கரோனா பரவல் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலையில் ஆவணி மாதம் பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான நாளை (ஆக.21) மாலை 7 மணி முதல், 22 ம் தேதி மாலை 6 மணி வரை, திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது.
ஒத்துழைப்பு
எனவே பக்தர்கள், பொதுமக்கள் எவரும் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அரசின் கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கரோனா நோய் தொற்று பரவல் கட்டுபடுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 300ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள்