திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கருங்காலிகுப்பம் சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி (19), ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் எடமாரிமண்டலம் குந்தவாலூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (22) ஆகிய இருவரும் காதலித்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இருதரப்பு பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த பின்னர், இருவரும் பெங்களூருவில் வசித்து வந்தாலும், பெற்றோர்கள் தங்களை மனசு மாறி ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவராஜ் - காயத்திரி தம்பதி, ஆரணி அடுத்த கருங்காலி குப்பம் கிராமத்திலுள்ள தேவராஜின் சித்தி சந்திராவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணத்தில், பெற்றோர்கள் பேச மறுப்பது இவர்கள் மத்தியில் நீங்காத துயரமாக இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த இத்தம்பதியினர், சித்தி வீட்டின் பின்புறமிருந்த மரம் ஒன்றில் ஒரே புடவையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த களம்பூர் காவல் துறை, உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆலன், தாஹாவை என்.ஐ.ஏ விசாரிக்கக்கோரும் வழக்கு : 21ஆம் தேதி தீர்ப்பு