திருவண்ணாமலை மாவட்டம் வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சென்னை பீனிக்ஸ் மாலில் பணியாற்றி வந்துள்ளார். ஊரடங்கின் போது இவர் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த இளைஞர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன் முதலாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்த இளைஞருக்கு, 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், முழுமையாக குணமடைந்தார். பிறகு, இரண்டு முறை பரிசோதனை மேற்கொண்டதில் கரோனா நோய் இவருக்கு இல்லை என உறுதி செய்யப்பட்டது.
அவர் முழுமையாக குணமடைந்ததை முன்னிட்டு, அந்த இளைஞருக்கு அருணாச்சலேஸ்வரர் கோயில் பிரசாதம் மற்றும் பழங்கள் ஆகியவற்றை திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.
பின்னர், ஆட்சியர் கந்தசாமி, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர். இவர்களுக்கு, இரு கரங்களையும் கூப்பி நன்றி தெரிவித்து, இளைஞர் விடுபட்டார்.
இதையும் படிங்க: 'ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மோடி சரியான நடவடிக்கை எடுத்துள்ளார்' - அரவிந்த் கெஜ்ரிவால்