திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை, காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை ஆகிய துறை அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கரோனா வைரஸ் நோய் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு அதன்படி தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளில் 41 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மருத்துவத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் இதர துறைகள் மூலம் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோர் இதுவரை யாரும் இல்லை. வெளிநாடுகளிலிருந்து வருகை புரிந்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 139 நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு கிடைக்கப் பெறாத ஆதரவற்ற நபர்களுக்கு அந்தந்த கிராமங்களில் சத்துணவு மையங்களில் சத்துணவு பணியாளர்கள் கொண்டு சமையல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் ஆதரவற்றவர்கள் 100 நாள் வேலை செய்பவர்கள், கர்ப்பிணிகள் உள்பட மொத்தம் 19 ஆயிரத்து 679 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 144 உத்தரவை மீறியதற்காக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் 870 கிராம ஊராட்சிகளிலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மூலம் சுகாதாரப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: திருவள்ளூர் நகராட்சியில் மருந்து தெளிக்கும் பணி தீவிரம்!