திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக மருத்துவத்துறை , வருவாய்த்துறை , காவல் துறை , உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் , மருத்துவர்கள் , செவிலியர் , மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் இரவு , பகல் பாராமல் தீவிர களப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் கரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்தகாக இன்று (மே 19) முதல் அரசு கலைக் கல்லூரி அருகிலுள்ள சுற்றுலா மாளிகை 24 மணி நேரம் இயங்கும் கரோனா பராமரிப்பு மையமாக செயல்பாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது .
இம்மையத்தில் , மருத்துவர்கள் , செவிலியர் , சுகாதாரப் பணியாளர்களுடன் 100 படுக்கைகள், உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்களப் பணியாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கரோனா பராமரிப்பு மையத்தில் போதிய வசதிகள், மருத்துவர்கள் உள்ளனரா என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று (மே 19) நேரில் சென்று பார்வையிட்டார் .
இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை பேகோபுரம் பிரதான தெரு , சட்டநாயக்கன் தெரு , காஞ்சி சாலை ஆகிய இடங்களில் சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்று வரும் காய்ச்சல், கரோனா பரிசோதனை முகாமினையும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து சட்டநாயகன் தெருவில் மருந்துகள் வைக்கப்பட்டுள்ள மொத்த விற்பனை சேமிப்பு கிடங்கினையும் ஆய்வு செய்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவது குறித்து சின்னக் கடை தெரு , வேங்கிக்கால் இந்திரா நகர் , அறிவியல் பூங்கா ஆகிய இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
அப்போது , கரோனா ஊரடங்கு கடைபிடிக்காமல் இருசக்கர வாகனங்களில் காரணமின்றி சுற்றிக் கொண்டிருந்தவர்கள் , அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்தும் வாகனத்தில் தக்காளி வியாபரம் செய்தவர், தேநீர் கடை நடத்தியவர் ஆகியோருக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்க உத்திரவிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. அரவிந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, துணை இயக்குநர் அஜிதா உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் உடனிருந்தனர்.