திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலருக்கான பணி ஆய்வுக் கூட்டம் இன்று(ஜன.27) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூன்று மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்று வரை முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 5 ஆயிரம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக மூன்று மாவட்டத்தில் மட்டும் 6400 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும், முடிந்தவரை பொதுமக்களுக்கு பட்டா மாறுதல், இ-பட்டா வழங்குதல் உள்ளிட்ட மனுக்கள் மீது 15 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும், மற்ற துறைகளுக்கு நிலம் எடுப்பில் அதிகாரிகள், குறிப்பிட்ட காலத்திற்குள் நிலம் எடுப்பில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக முதியோர் உதவித்தொகைகோரி விண்ணப்பித்த மனுக்களை தள்ளுபடி செய்யாமல் முடிந்தவரை அந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பழங்குடியினச் சான்று கேட்டு விண்ணப்பித்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும், எதிர்த்து நிற்கும் அனைத்து வேட்பாளர்களுக்கும் டெபாசிட் காலியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இ -சேவை மையங்களில் வாரிசு சான்றிதழ்கள் அளிக்க வட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி உள்ளதாகவும்; வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:Pariksha pe Charcha: சமூக அழுத்தத்தை குழந்தைகளின் மீது திணிக்கக்கூடாது - பிரதமர் அறிவுரை