திருவண்ணாமலை: ஆரணி அடுத்த தசராபேட்டை பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச்சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த மூன்று நாட்களாக வீட்டைப் பூட்டிக்கொண்டு பில்லி, சூனியம் போன்ற பூஜைகளை செய்ததாக கூறப்படுகிறது.
மூன்று நாட்களாக வீடு பூட்டப்பட்டு ஆட்கள் உள்ளே இருந்ததால் அதிர்ச்சியடைந்த ஊர் பொதுமக்கள் காவல்துறை, தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பூட்டியிருந்த வீட்டை திறக்கச்சொல்லி பேச்சு வார்த்தை நடத்தினர்.
அவர்கள் வீட்டின் கதவை திறக்காததால் ஜேசிபி இயந்திரம் மூலம் வீட்டின் கதவை திறந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உள்ளே நுழைந்தனர். உள்ளே இருந்த அந்த குடும்பத்தைச்சேர்ந்த ஆறு நபர்களை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வெளியே கொண்டு வந்தனர்.
அப்போது, அங்கு திரண்டிருந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் அவர்களைப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வெளியே வந்து பேய் பிடித்துக்கொண்டு ஆடுவது போல் நடந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சில நாட்களுக்கு முன் தான் கேரளாவில் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பெண்களை கடத்தி, நரபலி கொடுத்த சம்பவம் நடந்த நிலையில், இந்த சம்பவம் ஆரணி சுற்றுவட்டார மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம்; கொலையாளி சதீஷ் பிடிபட்டது எப்படி?