திருவண்ணாமலை நகரின் செட்டித் தெருவில் உள்ள அமுதா திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர்.ஜீவானந்தம் தலைமை தாங்கினார்.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த சுமதி வெங்கடேசன் கூறுகையில், "வருகிற 17 ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாளை சேவா வாரமாக கொண்டாட உள்ளோம்.
பிரதமரின் பிறந்தநாள், ஷியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் செப்டம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மகாத்மா காந்தியின் ஊர்வலம் மற்றும் அக்டோபர் 7ஆம் தேதி பாஜக மாநில தலைவர் முருகன் தலைமையில் வேல்யாத்திரை நடத்தப்பட உள்ளது.
அந்த யாத்திரையை வெற்றி யாத்திரையாக நடத்துவதற்கு உண்டான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறோம்.
வரும் 2021ஆம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்தும் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று, பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒரு முன்னோட்டமாக இந்த வேல் யாத்திரை அமையும்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. அது சம்பந்தமாக மாவட்ட பாஜகவின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாத நிலையில் மிகப்பெரிய போராட்டத்தை பாஜகவின் சார்பில் நடத்த உள்ளோம் என்று கூறினார்.
மேலும், அனைவருக்கும் வீடு, தனிநபர் கழிவறை உள்ளிட்ட திட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஊராட்சி செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பாஜகவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
குப்பநத்தம் அணையில் இருந்து வெளியேறும் நீரை ஏரிகளுக்கு கால்வாய் அமைத்து பாசனத்திற்கு நீர் அளிக்க வழிவகை செய்ய வேண்டும்.
திருவண்ணாமலை பழைய மருத்துவமனையை ஆயுஷ் மருத்துவமனையாக உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
திருவண்ணாமலை நகரின் ஈசானியம் மைதானத்தில் உள்ள குப்பை கிடங்கை அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்த செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன" என்றார்.