திருவண்ணாமலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பாஜக தொண்டர்கள், பொதுமக்களிடம் விளக்குவதற்காக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “ஊழலை செய்யவிடாமல் தடுக்கும் கட்சி பாஜக என்பதால், அதன் நோக்கத்தை சிதைக்கும் விதமாக சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்., போன்ற சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை; குறிப்பாக இஸ்லாமியர்களை, மதரீதியாக அவர்களை தூண்டி விட்டு, அவர்களை மோசடி செய்து மதவாத அரசியலை திமுகவும், பிற கட்சிகளும் செய்து வருகின்றன” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமியர்களை மதரீதியாக உணர்ச்சி வசப்படுத்தி அவர்களை தூண்டிவிட்டு, தேசத்திற்கு எதிராக தூண்டிவிடும் செயலை திமுக தான் செய்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. ஊழல் செய்ய முடியாததால் பாஜகவின் நடவடிக்கைகளை எதிர்த்து இது போன்ற செயல்களில் காங்கிரஸ், திமுக கட்சிகள் செய்துவருகிள்றன” என்று குற்றஞ்சாட்டினார்.
துணைவேந்தர் நியமனத்தில் காவியை புகுத்துகிறது என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் கல்வியை வியாபாரமாக்கியது திமுக தான் என்றும், திமுக மொழி அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழ்நாடு, அரசு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறினார்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை. மத்திய அரசு கொரோனா நோய் கிருமி சம்பந்தமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், அதிமுக நியமித்த மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.