திருவண்ணாமலை: அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயிலில் இருந்து பூஜை செய்யப்பட்ட அட்சதை கலசங்கள், விஷ்வ இந்து பரிஷத் சார்பில், நேற்று (டிச.14) திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள அமுதா மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோயில் கட்டும் பணி நிறைவடைந்து, ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இப்பணியை, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ராமர் கோயிலில் பூஜை செய்யப்பட்ட அட்சதை கலசங்கள் நாடு முழுவதும், விஷ்வ இந்து பரிஷத் சார்பில் அனுப்பி வைக்கப்படுகிறது.
அதன்படி, தமிழகத்திற்கு விஷ்வ இந்து பரிஷத்தின் மாநில நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளுக்கு அட்சதை கும்பத்தை கொண்டு செல்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட அட்சதை கலசம், திருவண்ணாமலை செட்டி தெருவில் அமைந்துள்ள அமுதா திருமண மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பூஜை செய்யப்பட்ட கலசத்தை பத்து பகுதியாக பிரித்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு கலசத்தை வழங்கினர். குறிப்பாக திருவண்ணாமலை, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, புதுப்பாளையம், போளூர், செங்கம் உள்ளிட்ட 10 ஒன்றியத்திற்கு நேற்று கலசமானது வழங்கப்பட்டது.
அவற்றை அந்தந்த பகுதி பாஜக, விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். மேலும், கலசத்தை தாங்கள் ஒன்றியத்தில் உள்ள கோயிலில் வைத்து, அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு அட்சதை மற்றும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக பத்திரிக்கை இணைத்து வழங்கப்படும் என்றனர்.
இதையும் படிங்க: "ஆண் கொசுக்களை உற்பத்தி செய்வதில் ஆராய்ச்சி..மனுதாரரின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க மதுரைக்கிளை உத்தரவு!