திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டைத் தெருவைச் சேர்ந்தவர் நசீர் கான் (30). இவர் அம்மா உணவகம் அருகே ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மஸ்தானுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும், நசீர் கான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மஸ்தானைத் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7) இரவு நசீர் கான் தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பத்துக்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாக நபர்கள் முகமூடி அணிந்து வந்து நசீர் கானை சரமாரியாகக் கத்தியால் தாக்கியுள்ளனர். அப்போது நசீர் கான் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதையடுத்து தகவலறிந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று நசீர் கானின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை