திருவண்ணாமலை அடுத்த ஓரந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவகுமார். இவரது மனைவி உமா, இவர்களின் இரண்டு குழந்தைகளும் சில வருடங்களுக்கு முன்பு ஆற்றில் குளிக்கும் போது அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையில்லாததால் மீண்டும் குழந்தை வரம் வேண்டி முயற்சித்துள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை சின்னகடைத் தெருவில் உள்ள மருத்துவர் சாய் பிரசன்னாவுக்குச் சொந்தமான மருத்துவமனையை அணுகியுள்ளனர்.
இந்த மருத்துவமனையில் செயற்கைக் கருவூட்டல் முறையில் கருத்தரிக்க செய்வதாகக் கூறி இரண்டு தவணைகளாக தலா ரூ.1.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்தை சிவகுமார்- உமா தம்பதியினரிடம் வசூலித்துள்ளனர். ஆனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாகியும் குழந்தை வரம் கிடைக்காததால் விரக்தியடைந்த உமா, தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் மருத்துவமனை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது உமா மயக்கமடைந்ததால் சிறிது பதற்றம் நிலவியது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உமா மற்றும் மருத்துவர் சாய் பிரசன்னா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக படிக்க: "அய்யா என் வீட்ட கண்டுபிடிச்சு குடுங்க.. " - கலெக்டரிடம் மனு அளித்த கடலூர் மக்கள்