திருவண்ணாமலை: ஆரணி அடுத்த சந்தவாசலைச்சேர்ந்தவர் ஜெயசுதா. கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றியபோது, அதே மருத்துவமனையில் எலக்ட்ரீசனாக பணிபுரிந்த குணசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
ஜெயசுதா கருவுற்ற நிலையில் அவருக்கும், குணசேகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். சொந்த ஊரான சந்தவாசலில் தஞ்சமடைந்த ஜெயசுதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தையான ஏனோக் ராஜுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார், ஜெயசுதா.
அப்போது ஜெயசுதாவின் உறவினர் மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது திருமணத்தைத் தாண்டிய காதலாக மாறி உள்ளது. ஏற்கெனவே திருமணமான மாணிக்கம், மனைவி மற்றும் மகளை கை கழுவி விட்டு, ஜெயசுதாவுடன் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து வசித்துள்ளார்.
இதனிடையே, மாணிக்கம் தினமும் குடித்துவிட்டு, 2 வயது குழந்தை ஏனோக் ராஜை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி, அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் குழந்தை என்றும் பாராமல் சூடு வைத்தும், தண்ணீர் தொட்டியில் 2 கால்களை பிடித்து மூழ்கடித்தும், கட்டையால் கொடூரமாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கடந்த மாதம் 21ஆம் தேதி வழக்கமாக, மது போதையில் வந்த மாணிக்கம், ஜெயசுதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆத்திரத்தில் 2 வயது குழந்தையை கட்டையால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த 2 வயது சிறுவன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இதய எலும்பு முறிவு அறுவை சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுவனின் உடல்நிலை மோசமாகி கொண்டே இருந்த நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சைப்பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்
சம்பவம் குறித்து குழந்தையின் தாய் ஜெயசுதா அளித்தப்புகாரில், ஆரணி தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த மாணிக்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணிக்கம் மேல் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் அடுத்த கட்ட விசாரணைகளை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி இந்தோனேஷியா பயணம்.. ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார்!