திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் பகுதியைச் சேர்ந்த தனசேகர். இவரது மனைவி ஜோதிலட்சுமி. இவர்களின் ஒரே மகன் பிரகாஷ் (33). இவர் கடந்த 10 ஆண்டுகளாக எல்லைப் பாதுகாப்பு படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
இவருக்கு ரேவதி என்ற மனைவியும், இரண்டு வயதுடைய மகனும் உள்ளனர். சொந்த கிராமத்தில் பிரகாஷின் பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் விடுமுறையில் வந்த பிரகாஷ் தனது சொந்த கிராமத்தில் சில நாள்களாக உறவினர்களுடன் தங்கிவிட்டு மீண்டும் பணிக்குச் சென்றுள்ளார்.
சிக்கிம் - சீனா எல்லைப் பகுதியில் பணியிலிருந்தபோது பிரகாஷ் உடல்நிலை குறைவால் உயிரிழந்ததாக அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகம் பிரகாஷ் உறவினர்களுக்கு மே 07 அன்று தகவல் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் உடல் தனி விமானம் மூலம் இன்று (மே 08) சென்னை விமான நிலையம் வருவதாகவும், அந்த உடலை ராணுவ அலுவலர்கள் கைப்பற்றி உடலை தனி வாகனத்தில் சொந்த கிராமத்திற்கு கொண்டுவந்து நல்லடக்கம் செய்யப்படும் என்று ராணுவ அலுவலர்கள் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.