திருவண்ணாமலை: சீலப்பந்தல் மதுரா மோட்டூர் கிராமம் கொளக்கரவாடி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் காங்கிரீட் வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டி மல்லவாடி இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் தனது தந்தை வெங்கடாசலத்துடன் (70) சென்ற கார்த்திக் மின் இணைப்பு வேண்டி கடந்த 21ஆம் தேதி கமர்சியல் இன்ஸ்பெக்டர் தேவி என்பவரை அணுகி விண்ணப்பித்துள்ளார்.
அனைத்து ஆவணங்களையும் பெற்றுக் கொண்ட கமர்சியல் இன்ஸ்பெக்டர் தேவி மின் இணைப்பு தர வேண்டிய பணியை நான் மேற்கொண்டு முடித்துத் தருகிறேன் என்று கூறி 16,000 ரூபாய் கொடுங்கள் என கேட்டுள்ளார். இதனை அடுத்து மின் இணைப்பு பெறுவதற்காக கார்த்திக்கின் தந்தை வெங்கடாசலம் மல்லவாடி இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் சென்ற பொழுது கமர்சியல் இன்ஸ்பெக்டர் தேவி 16,000 ரூபாய் இல்லாமல் மின் இணைப்பு தர முடியாது என கறாராக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பேரம் பேசி ஆயிரம் ரூபாய் குறைத்து 15 ஆயிரம் ரூபாய் தர வற்புறுத்தியுள்ளார். இதை அடுத்து வெங்கடாசலம் மின் இணைப்பு பெற ரூபாய் ஐந்தாயிரம் மட்டுமே டெபாசிட் செலுத்த வேண்டும் என கூறுகிறார்கள் என தெரிவித்த போது, அதற்கு தனக்கும் மேலதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உங்களால் மின் இணைப்பு பெற முடியும் என கூறியுள்ளார் கமர்சியல் இன்ஸ்பெக்டர் தேவி.
இதனை அடுத்து நேற்று காலை திருவண்ணாமலையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு எழுத்துப்பூர்வமாக வெங்கடாசலம் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தினை முதியவர் வெங்கடாசலத்திடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மல்லவாடி இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு சென்ற வெங்கடாசலம் ரசாயனம் தடவிய பணத்தினை கமர்சியல் இன்ஸ்பெக்டர் தேவியிடம் கொடுத்துள்ளார். அப்பொழுது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக லஞ்சப் பணத்துடன் தேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.