அண்ணாமலையார் தீர்த்தவாரி
ஆண்டுதோறும் மாசி மாதம் ரத சப்தமியன்று, கலசப்பாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு ரத சப்தமியை முன்னிட்டு நேற்று (பிப். 18) உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் திருவண்ணாமலையிலிருந்து கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு கொண்டுவரப்பட்டது.
செய்யாற்றில் நடைபெற்ற தீர்த்தவாரிக்கு வந்த அண்ணாமலையார் துரிஞ்சாபுரம் அடுத்த தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் வலம்வந்து பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, கலசப்பாக்கம் செய்யாற்றை வந்தடைந்தார்.
அதேபோல், கலசப்பாக்கத்திலிருந்து திரிபுரசுந்தரி உடனாய திருமாமுடீஸ்வரர் செய்யாறு வந்தடைந்தார், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் நேருக்கு நேராக செய்யாற்றில் இறங்கியவுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, செய்யாற்றில் அமைக்கப்படும் பந்தலில் உண்ணாமுலைம்மன் சமேத அண்ணாமலையார், திரிபுரசுந்தரி உடனாய திருமாமுடீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலையிலிருந்து அண்ணாமலையார் செய்யாற்றில் நடைபெறும் தீர்த்தவாரி வந்தபோது வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் மண்டகப்படி செய்து வழிபட்டனர்.