திருவண்ணாமலை நகரில் உள்ள சிவா ரெசிடென்சியில் அமமுக பேச்சாளர்களின் பயிலரங்கம், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மகளிரணிச் செயலாளர் வளர்மதி ஜெபராஜ், நட்சத்திரப் பேச்சாளர் நடிகர் ரஞ்சித், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பார்த்திபன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது சி.ஆர்.சரஸ்வதி பேசுகையில், “தலைமைக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் பேச்சாளர்கள் அனைவரும், நமது பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தினந்தோறும் ட்விட்டரில் பதிவிடும் கருத்துகளையும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்து வெளியிடும் பதிவையும் பின்பற்ற வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் கோட்பாடுகளையும் பின்பற்றிப் பேச வேண்டும்” என்று கூறினார்.