திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியம் முள்ளன்றம் ஊராட்சி, செய்யாறு ஊராட்சி ஒன்றியம், குன்னத்தூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.
பின்னர், பொதுமக்களுடன் சேர்ந்து சமத்துவப் பொங்கலை வைத்து வழிபட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செய்யார் சட்டப்பேரவை உறுப்பினர் தூசி மோகன், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இது குறித்து பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், "அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின்கீழ் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும்.
இளைஞர்களிடையே தலைமைப் பண்புகளை வளர்த்தல், கிராம இளைஞர்களிடம் கூட்டு மனப்பான்மையை உருவாக்குதல், கிராமங்களில் உள்ள விளையாட்டுத் திறன்மிக்க இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து அவர்களை உயர்மட்ட போட்டிகளில் சாதனை படைக்க வைத்தல் போன்றவை இத்திட்டத்தின் முதன்மையான நோக்கங்களாகும்" என்று தெரிவித்தார்.
பின்னர் ஆரணி ஊராட்சி ஒன்றியம் முள்ளன்றம் ஊராட்சியில் கைப்பந்து, கபடி, கிரிக்கெட் ஆகிய போட்டிகள், செய்யாறு ஊராட்சி ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சியில் கைப்பந்து, கபடி, பூப்பந்து ஆகிய போட்டிகளைத் தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க: கிரிக்கெட், வாலிபால் விளையாடி அசத்திய அமைச்சர்கள்!